சேலம் கிச்சிப்பாளையம் அருகேயுள்ள ஜலால்புறா பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை (எ) பைரோஸ் (38). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு செய்த குற்றச்செயல் காரணமாக சிறை தண்டனை பெற்று பிறகு விடுதலை ஆனார்.
இந்நிலையில், சேலம் நகர காவல் நிலைய ஆய்வாளர் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் அருள் ஆகியோர் பொய் வழக்குப் போட முயற்சிப்பதாக கூறி, சேலம் மாநகர காவல் நிலையம் முன்பாக பிளேடால் கழுத்து, கை பகுதிகளில் அறுத்துக்கொண்டு பைரோஸ் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக்கண்டு அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து பைரோஸ் கூறுகையில், "எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து திருந்தி வாழ்ந்து வரும் என்னை காவல் ஆய்வாளர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர், பொய் வழக்குப் போட்டு அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.
அதனால், வேறு வழியின்றி இன்று (பிப். 12) தற்கொலை செய்துகொள்ள முயன்றேன். என்னை விட்டுவிடுங்கள் நான் இறந்து விடுகிறேன்" என்றார். காவல் நிலையம் முன்பாக ஆட்டோ ஓட்டுநர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஃபிளிப்கார்ட் ஊழியரைத் தாக்கி, அலுவலகத்தை நொறுக்கும் போதை கும்பல்!