ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சி பகுதிகளில் அடிப்படை பணிகளை மேற்கொள்ள நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
ஊராட்சி நிர்வாகத்தில் நிதி இல்லாததால் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளதாகவும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், கல்லாநத்தம் ஊராட்சித் தலைவர் சூடாமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி நிர்வாகங்களில் கடந்த ஜனவரி மாதம் முதலே நிதி இல்லாத சூழல் இருக்கிறது. இதனால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர முடியவில்லை.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறோம். ஆட்சியர் அலுவலகம் சார்பாக சம்பந்தப்பட்ட துறையினருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்" என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பைத்தூர் ஊராட்சித் தலைவர் கலைச்செல்வி கூறுகையில், "எங்களது பகுதி மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அவர்களுக்குத் தேவையான குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு ஊராட்சியில் நிதி இல்லை. சென்ற மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கு உரிய பொது நிதியினை ஊராட்சி மன்றங்களுக்கு இன்னமும் விடுவிக்கப்படாதச் சூழல் நிலவுகிறது.
இதனால் கரோனா தொற்று தடுப்புப் பணி செய்வதில்கூட சிரமம் ஏற்பட்டுள்ளது. கிருமிநாசினி மருந்து தெளிப்பதற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உரிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து இருக்கிறோம். உரிய நடவடிக்கை விரைந்து எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க... சுடு தண்ணீர் கூட கொடுப்பதில்லை; கரோனா பாதித்தவர்கள் சரமாரி குற்றச்சாட்டு