சேலம்: நாட்டில் தற்போது கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து பொதுமக்கள் கசாயம் தயாரிப்பது, நீராவி பிடிப்பது என அதிக அளவில் இஞ்சியை பயன்படுத்திவருகின்றனர்.
இதன் காரணமாக, சேலம் மாவட்டத்திற்கு இஞ்சி வரத்து கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துள்ளது. மாநகரில் செயல்பட்டுவரும் உழவர் சந்தைகள் மற்றும் தனியார் காய்கறிக் கடைகளில் ஒரு கிலோ தரமான இஞ்சி ரூ.100 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையில், சேலம் மாநகரின் தெருக்களில் பல்வேறு இடங்களில் லோடு ஆட்டோக்கள் மூலம் அஸ்ஸாம் மாநிலத்தில் விளைவிக்கப்பட்ட இஞ்சி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ஒன்றரை கிலோ இஞ்சி ரூ.50 என்பதால் லோடு ஆட்டோக்களில் விற்பனை செய்யப்படும் இஞ்சியினை வாடிக்கையாளர்கள் கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.
இஞ்சி விற்பனை குறித்து விற்பனையாளர் அப்பாஸ் கூறுகையில், "நாங்கள் திருவண்ணாமலையிலிருந்து வருகிறோம். அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சியை லோடு ஆட்டோவில் கொண்டுவந்து சேலத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனைசெய்கிறோம். ஐந்துக்கும் மேற்பட்ட வண்டிகளில் விற்பனை செய்துவருகிறோம்.
கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் காலம் என்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்திட பொதுமக்கள் ஆர்வமாக இஞ்சியை வாங்கிச் செல்கின்றனர். இஞ்சி, எலுமிச்சைப் பழம் ஆகியவற்றை சேர்த்து 'டீ' தயாரித்துக் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளதால் பொதுமக்கள் ஆர்வமுடன் இஞ்சியை வாங்கிச் செல்கின்றனர்" என்றார்.
இதையும் படிங்க:’சாப்பாட்டில் இஞ்சி, மிளகு, சுக்கு சேத்துக்கோங்க’ - எஸ்.வி.சேகர் வெளியிட்ட கரோனா விழிப்புணர்வு வீடியோ!