சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதியில் (ஜெஸ்டின் வின் ஐடி இந்தியா பிரைவேட் லிமிடெட்) என்ற தனியார் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் மூலம் ஒரு லட்சம் டெபாசிட் செய்தால், மாதம் 20 ஆயிரம் ரூபாய் வீதம் தருவதாகக் கூறி, விளம்பரம் செய்துள்ளனர்.
இதனை நம்பி ஏராளமானோர் பணம் முதலீடு செய்தனர். ஆனால், கூறிய பணத்தைத் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சின்னதிருப்பதியைச் சேர்ந்த சிவா என்பவர், ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால், வட்டியும் அசலும் தரவில்லை எனத் தெரிகிறது.
இதனால் சிவா, சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமாரைச் சந்தித்து, தனது பணத்தைப் பெற்றுத் தருமாறு புகார் செய்தார். இதனையடுத்து இந்த வழக்கு குறித்து விசாரிக்க, சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. இதன்பேரில், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இந்த நிறுவனத்தை நடத்தி வந்த மூன்று பேர் ஒன்பது ஆயிரம் பேரிடம் இருந்து ரூபாய் 90 கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடி தொடர்பாக சேலம், தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (51), சுப்பிரமணி (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடிக்குத் துணையாக இருந்த வினோத் குமார் என்பவரைக் காவல் துறையினர் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியம், சுப்பிரமணி சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரின் புகைப்படங்களையும் காவல்துறையினர் இன்று வெளியிட்டனர்.