சேலம்: சேலத்தில் முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை இல்ல திருமண விழா நடைபெற்றது.
இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்தினர்.
திமுக தவறை மறைக்க அதிமுக மீது குற்றச்சாட்டு
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமுக அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை. தன்மீது உள்ள தவறை மறைக்கக் கடந்த அதிமுக அரசு மீது குறை சொல்லக் கூடாது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
உரிய ஆதாரம் இன்றி கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமைச்சர்கள் கூறுவதை ஏற்க முடியாது.
இது குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களை விசாரணை செய்து தெரிவிக்கவும், மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்" என்றார். தமிழ்நாட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்
மேலும், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையைக் குறைக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் விலையைக் கொண்டு வந்தால் நிச்சயம் ஒரு லிட்டர் பெட்ரோல் 60 ரூபாய்க்குக் கீழ் வரும்.
ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்யும்போது
முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்யும்போது அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு போடுவதைத் தவிர்த்தாலே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும்.
அவர் அமைச்சர்களின் பாதுகாப்புப் பணிக்காக மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தக் கூடாது” என்றார்.
மக்களைத் திசை திருப்புவதற்காகவே திமுக
மேலும், “வெள்ள பாதிப்பு விவகாரத்தில் மக்களைத் திசை திருப்புவதற்காகவே திமுக அரசு தற்போது தமிழ் புத்தாண்டு தேதி சர்ச்சையைக் கையில் எடுத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Omicron in India: இந்தியாவில் நுழைந்த ஒமைக்கரான் - இருவருக்கு தொற்று உறுதி