சேலம் மாவட்டம், ஓமலூரில் உலக ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அங்கன்வாடி மைய பணியாளர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், அனைவரும் சத்தான உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும், புரதச்சத்து நிறைந்த சிருதானி உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும், கம்பு, ராகி, சோளம், குதிரைவாளி, திணை, சாமை, கொள்ளு, எள்ளு போன்ற பல்வேறு தானியங்களின் உணவுகளை வாரத்தில் ஒரு நாளாவது சாப்பிட வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
இந்த பேரணியானது ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் பள்ளியை அடைந்தது. அதனைத் தொடர்ந்து பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. வீட்டில் சத்தான உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டும், முளைகட்டிய தானியங்களை சாப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.