கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்று வரும் முறைகேடுகளைக் கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தினர் காவல் துறையினரிடம் அனுமதி கோரியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதாக காவல் துறையினர் தெரிவித்ததையடுத்து, காவல் துறையினரின் தடையையும் மீறி, அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் பாரதி தலைமையில் திரண்ட முப்பதுக்கும் மேற்பட்டவர்கள், டிஎன்பிஎஸ்சியில் நடைபெற்றுள்ள முறைகேடுகளைக் கண்டித்தும், முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர் பெரு மன்றத்தினரைக் காவல் துறையினர் கைது செய்ய முற்பட்ட போது, இரு தரப்பினரிடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து அனைவரும் கைதாகி, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி விவகாரம்... ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர்