திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சின்னத்துரை - சுகந்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மகனும், பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மகன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சின்னத்துரை கொத்தனராகவும், சுகந்தி ஹோட்டலிலும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது மகன் இன்று மதியம் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்புவதற்காக சாலையில் நடந்து வரும்போது, திருமலை கொழுந்து புரம் நோக்கி வேகமாக சென்ற கார் ஒன்று சிறுவன் மீது மோதும்படி சென்றுள்ளது.
இதனால் வேகமாக சென்ற காரை நோக்கி ஏன் வேகமாக இப்படி மோதும்படி செல்கிறீர்கள்? என சிறுவன் காரில் சென்றவர்களை நோக்கி கேட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்து காரில் இருந்தவர்கள் சிறுவனுடன் தகராறு செய்துள்ளனர்.
உடனிருந்த மற்றொரு நபர் இருவரையும் விலக்கி வைத்து வீட்டிற்கு செல்லுமாறு சிறுவனை அனுப்பி வைத்துள்ளார். மதிய வேளையில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து மாலையில் மீண்டும் திருமலை கொழுந்து புரத்திலிருந்து காரில் கும்பலுடன் வந்து வீட்டில் தனியாக இருந்த சிறுவனை அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க : திருப்பத்தூரில் 14 பைக்குகளை திருடிய ஆசாமிகள்..போலீஸிடம் சிக்கியது எப்படி?
மேலும், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து நொறுக்கி உள்ளனர். இந்த சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவன் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவன். அவனை தாக்கியது மாற்று வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனவே, சாதி வன்மத்தோடு மாணவனை அக்கும்பல் தாக்கி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் சுகந்தி கூறுகையில், "நாங்கள் கூலி வேலை செய்கிறோம். தினமும் நாங்கள் வேலைக்கு சென்றால் தான் குடும்பம் நடத்த முடியும். எந்த முன் பகையும் இல்லாமல் இன்று ஒரே நாளில் நடந்த பிரச்னைக்காக எனது மகனை வீடு புகுந்து இப்படி வெட்டியுள்ளனர். 17 வயதில் எனது மகனுக்கு இப்படி ஒரு வன்கொடுமை நடக்க வேண்டுமா? நாங்கள் எப்படி உயிர் வாழ்வது? எனது மகனைப் போல் வேறு யாருக்கும் இனி இது போன்று நடக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்