சென்னை: ’வணங்கான்’ படப்பிடிப்பு சமயத்தில் மமிதா பைஜூவை அடித்ததாக வெளியான சர்ச்சை குறித்து பாலா பேசியுள்ளார். இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய், சமுத்திரகனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’வணங்கான்’. இத்திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்நிலையில் வணங்கான் திரைப்பட ப்ரமோஷனில் இயக்குநர் பாலா அவரை பற்றி பேசப்படும் சர்ச்சைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
வணங்கான் திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடித்து வந்தார். பின்னர் சூர்யா அப்படத்தில் இருந்து விலகி, தற்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். இதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய பாலா, சூர்யாவுக்கும் எனக்கும் எந்த வித மனக்கசப்பும் இல்லை. அவரை வைத்து வணங்கான் படத்தின் படப்பிடிப்பை கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் நடத்தி வந்தேன் எனவும், ஆனால் அங்கு அவரை பார்க்க வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் பாலா கூறினார்.
மேலும் அதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு நாங்கள் இருவரும் பேசிக் கொண்டு, வேறு படத்தில் இணையலாம் என முடிவு செய்தோம் என பாலா கூறினார். மேலும் வணங்கான் படத்தில் முதலில் பிரேமலு திரைப்பட புகழ் நடிகை மமிதா பைஜூ நடித்து வந்தார். அப்போது அவரை பாலா அடித்ததாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து நேர்காணலில் பாலாவிடம் கேட்ட போது, "அவள் என் மகள் மாதிரி, அவளை போய் நான் அடிப்பேனா, அதுவும் மிகவும் சிறியவள்.
மும்பையில் இருந்து வந்த மேக்கப் கலைஞர் மமிதாவுக்கு மேக்கப் போட்டு கொண்டிருந்தார். நான் பொதுவாக எனது படத்தில் நடிகர்களுக்கு மேக்கப் போடுவதை தவிர்ப்பேன். ஆனால் மமிதாவிற்கு வேண்டாமென்று சொல்லத் தெரியவில்லை. அவர் நடிக்க ரெடியானதும், மமிதா மேக்கப்போடு வந்ததும், யார் மேக்கப் போட்டது என விளையாட்டாக கை ஓங்கினேன்.
இதையும் படிங்க: ’சர்தார் 2’ முதல் ’ஜெயிலர் 2’ வரை... 2025இல் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் 'பார்ட் 2' படங்கள் என்ன? - TAMIL CINEMA SEQUELS 2025
அதை வைத்து மமிதா பைஜூவை நான் அடித்தேன் என செய்தி பரப்ப தொடங்கிவிட்டனர்” என விளக்கம் அளித்துள்ளார். இயக்குநர் பாலா திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர்கள், அருண் விஜய், சிவக்குமார், சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.