சேலம்: எடப்பாடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், 'சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறவில்லை. திட்டமிட்டு பணிகளை அரசு செயல்படுத்தவில்லை. சென்னை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று குற்றச்சாட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'அதிமுக தமிழ்நாட்டில் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும்.
அதிமுகவிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு இனிமேல் அதிமுகவில் இடமில்லை. அதிமுக அபரிவிதமான வளர்ச்சி பெற்று வரும் நிலையில், வேண்டுமென்றே சில பேர் அதிமுகவைப் பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பொம்மை முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ளார்.
இந்த அரசு கும்பகர்ணனைப்போல் தூங்கி வருகிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்குத்தடை விதித்து, அவசர சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். அமைச்சர் பொன்முடி பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்வதை ஓசி பயணம் செல்கிறார்கள் என கொச்சைப்படுத்தி பேசுவது சரியல்ல. வருத்தமளிக்கிறது.
மக்களை கேவலப்படுத்துவதுபோல் பேசுவது கண்டிக்கத்தக்கது. சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறவில்லை. திட்டமிட்டு பணிகளை அரசு செயல்படுத்தவில்லை. இதனால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாட்டு துப்பாக்கி தயாரித்த விவகாரம்: சேலம் அருகே என்ஐஏ சோதனை