சேலம்: சேலம் மாநகராட்சி டெண்டரில் முறைகேடு நடந்ததாக மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி மன்றக் கூட்டம், மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று (செப்.26) நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய திமுக உறுப்பினர்கள், மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை புகழ்ந்து பேசி நேரத்தை விரயம் ஆக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து, மாமன்ற எதிர்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசும்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விமர்சித்தார். அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனை அடுத்து மாமன்ற அதிமுக எதிர்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி தலைமையில், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாமன்ற எதிர்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிபோல் நிறைவேற்றவில்லை. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை, மடிக்கணினி திட்டம், அம்மா உணவகம் திட்டம் ஆகியவற்றை எல்லாம் திமுக அரசு முடக்கி விட்டது. மேலும், சொத்து வரி ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் அளவீடு செய்து கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்” எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், “சேலம் மாநகராட்சி பகுதிகளில் குப்பைக் கழிவுகளை சேகரிக்கும் பணிக்கு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் அடிமாட்டு விலைக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி நிதி வருடத்திற்கு 80 கோடி ரூபாய் வீணாகி உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக உடன் விசிக கூட்டணியா? - வன்னி அரசு பதில்!