சேலம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் நீர் வெள்ளம்போல் வழிந்தோடுகிறது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் குமரகிரி ஏரி முற்றிலும் நிரம்பி அதிகப்படியான நீர் வெளியேறி வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளான பச்சப்பட்டி, ஆறுமுக நகர், நாராயண நகர், கிச்சிபாளையம், பாவடிதெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் சாலைகள், வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.
பெருக்கெடுத்துவரும் மழைநீர் வீடுகளுக்குள் புகும்போது பாம்பு பூச்சிகள் நீருடன் அடித்துவரப்படுகிறது. மேலும் குடியிருப்புகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுந்தடைந்து பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது வீடுகளில் உள்ள மழை நீரை மின்மோட்டார்கள் மூலம் அப்பகுதி மக்கள் வெளியேற்றி வருகின்றனர்.
சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் பாய்வதால் வாகனங்களை இயக்க முடியாமல், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதியிலுள்ள ராஜவாய்க்கால் தூர் வாரப்படதததாலேயே மழைநீர் உட்புகுவதாக பச்சப்பட்டி மக்கள் குற்றம்சாட்டினர்.