தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் மாநில அளவில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் சம பலத்தில் வெற்றி கிடைத்தது. இதன் காரணமாக வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியும் திமுக கூட்டணியும் வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்ற முனைப்போடு, ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் மிகவும் கவனத்தோடு செயல்படுத்தி வருகின்றன. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியின் அரசியல் நகர்வுகள் முன்னணியில் உள்ளது.
மாவட்ட அளவிலான பதவிகளுக்கும் ஊராட்சி அளவிலான பதவிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடவடிக்கையில் மாநில தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்ட அளவில் அதிமுக கூட்டணி பலத்தோடு இருப்பதால் சேலம் மாநகராட்சி மேயர் பதவியை அதிமுக பெறுவதற்கு அனைத்து கட்ட ஏற்பாடுகளையும் முழுவீச்சில் செய்துவருகிறது. முதலமைச்சர் எடப்பாடியின் சொந்த மாவட்டம் என்பதால், சேலத்தில் அவரின் அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. ஆனால், சேலம் மாநகராட்சி மேயர் பதவியை அதிமுக கூட்டணியிலுள்ள பாமக பெறுவதற்கு முழு முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.
இதனையறிந்த முதலமைச்சர், மாநகராட்சி மேயர் பதவியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு ஈடாக சேலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை பாமகவுக்கு வழங்குவதாகவும் தெரிவித்திருந்ததாகவும் நம்பத்தகுந்த அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் மூலம் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ரேவதி 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாமகவின் விருப்பம் ஓரளவு நிறைவேறியதாக சேலம் மாவட்ட பாமகவினர் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதில் திமுகவுக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றிய நிலையில், கடுமையான அரசியல் மோதல்கள் அங்கு நடந்தன. இதனையடுத்து வேறுவழியின்றி அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பதவியை திமுகவுக்கு மதிமுக விட்டுக்கொடுத்து சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இறுதியில் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 18 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 288 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டுகளில், அதிமுக 37 இடங்களையும் கூட்டணிக் கட்சிகளான தேமுதிக 5 இடங்களையும் பாமக 39 இடங்களையும் தமாகா 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
இதில் திமுக 76 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 4 இடங்களையும் கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களையும் மதிமுக 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன. சுயேச்சைகள் 29 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக 17 இடங்களையும் பாமக ஒரு இடத்தையும் பெற்றுள்ளது . மேச்சேரி , தாரமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவிகளில் அதிமுக 18 இடங்களையும், பாமக 3 இடங்களையும், தேமுதிக இரண்டு இடங்களையும் பிடித்துள்ளன. திமுக 3 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 1 இடத்தையும் பிடித்துள்ளன. சுயேச்சை 1 இடத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கவுன்சிலர்களும் அதிமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுக சார்பில் கரட்டூர் மணி கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் . அதேபோல துணைத் தலைவராக வைத்தியலிங்கம் முருகன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .
இதேபோல எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட குப்பம்மாள் மாதேஷ் ஒன்றியத் தலைவராகவும், ராணி துணைத் தலைவராகவும் போட்டியின்றி தேர்வாகினர். இதேபோல சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த மகேஸ்வரி ஒன்றியத் தலைவராகவும் சிவகுமாரன் துணைத் தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தில் சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினரின் மனைவி லலிதா ராஜா ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும் சரஸ்வதி நாகராஜன் துணைத் தலைவராகவும் மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் . இந்தத் தொகுதியிலும் அதிமுகவைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தியதால் எடப்பாடி தொகுதியில் அதிமுக தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சேலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதிமுகவின் கரம் ஓங்கியிருப்பதாக அக்கட்சியினர் உற்சாகத்தோடு தெரிவிக்கின்றனர் . இதேநிலை பேரூராட்சி, நகராட்சி மேயர் தேர்தல்களிலும் எதிரொலிக்கும் என்பதால் அவர்கள் கூடுதல் உற்சாகத்தோடு அடுத்தகட்ட அரசியல் பணிகளில் இறங்கியுள்ளனர் .
மாவட்டம் முழுவதும் 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் மறைமுகத் தேர்தல் நடைபெற்ற அன்று, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று மறைமுக தேர்தல் நடைபெறும் நிலவரங்களை நேரில் கவனித்து அதிமுக உறுப்பினர்கள் வெற்றிபெறுவதற்கு ஆலோசனைகளை வழங்கினார் .
அதற்கு பாமகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் மாவட்டத்தின் முக்கிய[ப் பகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற முடிந்துள்ளது . எதிர்வரும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலையும் சட்டப்பேரவைத் தேர்தலையும் முழு வீச்சில் களமிறங்கி வெற்றிபெற வேண்டும் என்று அதிமுகவினருக்கு முதலமைச்சர் ரகசிய உத்தரவு பிறப்பித்திருப்பதால், அதிமுகவினர் தீவிர உற்சாகத்தோடு அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அதிமுக அதிகாரத்தில் இருப்பதால் ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளது என்று சேலம் மாவட்ட திமுகவினர் கடுமையாக குற்றம்சாட்டி வந்தாலும், திமுக கூட்டணியிலுள்ள மற்ற கட்சியினரின் உணர்வுகளை திமுக தலைமை உணராமல் செயல்பட்டு வருவதும் இந்தத் தோல்விக்கு காரணம் என்று கூட்டணிக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சாமுராய் குரு என்பவர் அந்த ஒன்றியத்தில் 19ஆவது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார் . ஆனால் அவரிடம் இதுவரை சேலம் மாவட்ட திமுக தலைமை எந்த ஒரு தொடர்பும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனையளிப்பதாக அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்திருந்தார் .
தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும், திமுகவைக் கடுமையாக விமர்சித்துவருகிறார். இதேபோன்ற நிலையைத்தான் மாவட்டம் முழுவதும் திமுகவினர் மேற்கொண்டுள்ளனர் என்பதே திமுக கூட்டணிக் கட்சியினரின் மனக்குமுறல். இதை சரிசெய்து கூட்டணிக் கட்சியினரை அரவணைத்து திமுக சேலம் மாவட்ட தலைமை செயல்பட்டால் மட்டுமே எதிர்வரும் தேர்தல்களில் வெற்றியைப் பெற முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'எதிலும் உண்மை இல்லை, உண்மை இல்லாமலும் இல்லை’ - கே.எஸ்.அழகிரி