சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பட்டியலின மக்களின் மயானப் பகுதியை தனி நபருக்கு பட்டா போட்டு அரசு அலுவலர்கள் வழங்கிய விவகாரம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில், கொண்டலாம்பட்டி பகுதியில் புவனேஷ் என்பவருக்கு பட்டியலின மக்களின் மயானத்தை பட்டா போட்டு அலுவலர்கள் வழங்கியுள்ளனர். அரசு வெளியிட்டுள்ள வரைபடத்தில் அந்த இடம் அம்மக்களுக்கு மயானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மயான நிலத்தை தனிநபர் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வேலி அமைத்து பயன்படுத்தி வருகிறார். இதனை பலமுறை அந்த பகுதியில் உள்ள கோட்டாட்சியரிடம் எடுத்துரைத்தும், தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் இமயவர்மன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், உடனடியாக ஆதிதிராவிடர் பயன்படுத்தும் மயானத்தை நிலத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை, மாவட்ட நிர்வாகம் மீட்டு தரவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.