சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”திமுக ஆட்சி செய்த ஓராண்டு காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் சொத்துகளை இழந்து இன்னுயிரையும் இழந்துவிட்டனர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு நடிகர்கள் உள்பட பிரபலங்கள் யாரும் துணை போகக்கூடாது. அரசும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் அதிகரித்து வருகிறது. அதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஏழை குழந்தைகளின் நலனுக்காக அதிமுக ஆட்சியில் அரசுப்பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட எல்கேஜி,யூகேஜி வகுப்புகள் ரத்து செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என்றார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், 'அந்தக்கேள்வி கற்பனையானது' என்று விமர்சித்தார். 'கந்துவட்டி மிகப்பெரிய கொடுமை; காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே அதனால் உயிரிழந்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர் அரசு கந்துவட்டியை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியைத் தவிர்த்து எல்லாமே எதிர்க்கட்சிதான். அதில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக என்றார்.
மேலும், விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்யும் கட்சி திமுக என்பதை கரூர் சாலை அமைக்காமலேயே ஊழல் செய்து மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என்றும் விமர்சித்தார். கட்சியிலேயே இல்லாத சசிகலா குறித்து ஊடகத்தினர் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
‘மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பது தேவையற்றது என்றும்; பருவகாலத்தை வைத்தே தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கூறிய அவர் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படாமல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகத் தகவல் அறிந்தேன்’ என்றார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் காவல் துறை உட்பட பல்வேறு துறையில் பணியாற்றும் நபர்களின் உயிரைப் பறித்த ஆன்லைன் விளையாட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடை விதிக்கக்கோரி உள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்