தமிழ்நாட்டில் நீட்தேர்வு அச்சத்தினால் மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். அப்பாவி, மாணவர்களின் தற்கொலை தொடர்பாக, திரைப்பட முன்னணி நடிகர் சூர்யா, கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கை தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி விழாவில், இந்து மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தர்மா, சூர்யாவை செருப்பால் அடிப்பவர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக செய்திகள் வெளியாகின.
இதனால், கொதிப்படைந்த சூர்யா ரசிகர்கள், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் புகார் மனு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் , மாவட்ட தலைவர் அஜித் தலைமையில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நடிகர் சூர்யாவை தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பேசிய இந்து மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தர்மா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: இந்து மக்கள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூர்யா ரசிகர்கள் மனு!