தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களம் காண்கின்றனர்.
இந்த நிலையில், சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் உதயா, நடிகை ஆர்த்தி, நடிகர் கணேஷ் ஆகியோர் இன்று (ஜூன் 15) சேலம் நாடக நடிகர் சங்கம் வந்திருந்து சங்க உறுப்பினர்களிடையே பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தனர்.
அப்போது சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தயார் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கையை உதயா வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாண்டவர் அணியை பாராட்டுகிறோம். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டடம் கட்டும் பணியை அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 18 செயற்குழு கூட்டங்களுக்கு, பொதுச் செயலாளராக உள்ள நடிகர் விஷால் வரவில்லை.
சங்க உறுப்பினர்கள் விஷாலுக்கு பிடிக்காத நடிகர்களுடன் ஃபோட்டோ எடுத்தால்கூட அவர்களை சங்கத்தில் இருந்து அவர் நீக்கி விடுகிறார். அதற்குரிய விளக்கமும் அவர் இதுவரை கொடுக்கவில்லை. 300க்கும் மேற்பட்டோரை விஷால் நீக்கியுள்ளார். எனக்கு விஷாலுடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடு இல்லை.
ஐசரி கணேஷ் வட்டி இல்லாமல் பல கோடி ரூபாய் கடன் கொடுத்து நடிகர் சங்க வளர்ச்சிக்காக உதவியிருக்கிறார். தற்போதும் நலிந்த நாடக நடிகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார். ஆனால் இவர்களின் செயல்கள் வெளியே தெரிவதில்லை.
நாங்கள் வெற்றி பெற்றால் எந்த ஒரு கலை நிகழ்ச்சியும் நடத்தி நிதி திரட்டாமல் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை ஆறுமாத காலத்திற்குள் கட்டி முடிப்போம்” என்று தெரிவித்தார்.