சேலம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ளது முள்ளுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஹரிஹரன் (23). நான்கு மாத கர்ப்பிணிப் பெண்ணான இவரது மனைவி லட்சுமி, ஹரிஹரனுடன் ஏற்பட்ட தகராற்றின்போது தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதில், படுகாயம் அடைந்த லட்சுமியை உறவினர்கள் தூக்கி வந்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். இந்த நிலையில் இன்று (டிச 25) காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த ஹரிஹரன் தனது மனைவி ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனை அடுத்து அவர், தனது மனைவிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக்கூறி மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதன் பின்னர் விரக்தியடைந்த ஹரிஹரன் மருத்துவமனை வாளகத்திலேயே திடீரென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட மருத்துவர்கள் உடனே ஹரிஹரனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அங்கு ஹரிஹரனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவி கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால், போலீசார் தன்னையும் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் ஹரிஹரன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, செவ்வாய் பேட்டை காவல் நிலையம் மற்றும் மருத்துவமனை புறக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுமையாகச் சிந்தித்து, நிதானமாய் செயல்பட்டால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கான தீர்வு நிச்சயமாகக் கிடைக்கும். அதைத் தவிர்த்து தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வு ஆகாது. எனவே தற்கொலை எண்ணத்தைக் கைவிடுக.
மேலும், சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் - help@snehaindia.org மற்றும் சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட் 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028 என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்.. ஏ ப்ளஸ் ரவுடி கைது..!