சேலம் மாவட்டம் குகை பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன். இவர் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பத்மினி என்பவரிடம் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கொடுத்த கடனை திரும்ப பெற பல முறை முயற்சித்தும் முடியாததால் மனமுடைந்த சிவராமன், தனது மனைவி புஷ்பா மற்றும் மகன் பாபு ஆகியோருக்கு பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்துவிட்டு அவரும் அதே மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட மூன்று பேரின் சடலங்களையும் சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் மீட்டு உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சிவராமன் எழுதி வைத்திருந்த இரண்டு கடிதத்தை கைப்பற்றிய செவ்வாய்பேட்டை காவல்துறையினர் அதை வைத்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து சிவராமன் எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில், கடன் வாங்கிவிட்டு திருப்பி தராத பத்மினி மற்றும் அவரது உறவினரான நாக சண்முகம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்ய முயன்றனர்.
தகவல் அறிந்த நாக சண்முகம் தலைமறைவானதையடுத்து, பத்மினியை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சேலம் பெண்கள் கிளை சிறையில் பத்மினியை அடைத்தனர்.
மேலும் தலைமறைவாகியுள்ள நாக சண்முகத்தை பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.