சேலத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டுவரும் இரும்பாலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பணிபுரியும் ஊழியர்களும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்கும் கொள்கையைக் கைவிட வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரும்பு ஆலை ஊழியர்கள், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார்.
போராட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, "சேலம் இரும்பாலை என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஒரு தொழில் நிறுவனமாக விளங்குகிறது. இந்த ஆலையை மத்திய பாஜக அரசு தனி ஒரு நபருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதேபோன்று, சேலம்-சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டம் என்பது தனி ஒரு நபருக்காக அமைக்கப்படும் சாலையாகும். மேலும், கஞ்சமலை, திருவண்ணாமலை ஆகியவற்றில் உள்ள கனிம வளங்கங்ளை வெட்டி எடுத்து நேரடியாக சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்காக அமைக்கப்படும் முயற்சிக்கு இந்த சாலை உதவும்.
விவசாயத்தையும், விளைநிலங்களையும் அழித்து போடப்படும் இதுபோன்ற சாலைகளை எந்த ஒரு காலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது" என்றார்.