மத்திய அரசின் புள்ளியியல், திட்ட செயலாக்க அமைச்சகத்தின் மூலம் பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு ஐந்தாண்டுக்கு ஒருமுறை இந்திய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பொது சேவை மையங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்துறை கணக்கெடுப்பாளர்கள் மூலம் இந்த திட்டம் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
இந்த வகையில் தற்போது ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு, செல்ஃபோன் செயலி மூலம் ஆன்லைன் வழியே நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து சிறு குறு, பெரும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், நடைபாதை கடைகள் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்படும்.
இதில் மத்திய, மாநில அரசின் பொருளியல், புள்ளியியல் துறை, பொது சேவை மையங்கள் ஆகியவை இணைந்துள்ளன. இந்தத் துறைகளின் ஊழியர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி, சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் தொடங்கியது.
மேலும், பொருளாதார கணக்கெடுப்பு குறித்த பயிற்சியும் கணக்கெடுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது . இதில் பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.