மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நெருங்கிவிட்டதால் தேர்தல் பறக்கும்படையினர் தமிழ்நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் ஆங்காங்கே பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 73 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பையிலிருந்து மதுரை, திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்ட நகைகள் என கூறப்பட்டாலும் உரிய ஆவணங்கள் ஏதுமில்லாததால் அந்த நகைகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்டஆட்சியருமான ரோகிணி அளித்த பேட்டியில், "தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் இன்றுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.4 கோடியே 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 3.9 கிலோ தங்கம் , 75 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து தேர்தல் பறக்கும்படை, நிலைக்குழு அதிகாரிகளின் சோதனைமேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் , ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் ஒன்பது நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனசோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தேர்தல் செலவினங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். பொதுமக்கள் எந்த ஒரு அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் சமூக விரோதிகள் கணக்கெடுக்கப்பட்டு 261 பேர் மீது குண்டாஸ் உள்ளிட்ட கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.