சேலம் மாவட்டம், சத்திரம் அருகே உள்ள காடு பகுதியை சேர்ந்த தம்பதி பாலாஜி-வித்யா. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், வீட்டிற்கு வெளியே சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை யோகேஸ்வரனை, அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் கடத்திச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனை அறிந்த பெற்றோர்கள் பதறிப் போய் செவ்வாப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணையில் இறங்கினர். மாநகரம் முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடினர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாநகர காவல் துணை ஆணையர் ரங்கதுரை நேரில் பார்வையிட்டு குழந்தையை மீட்கும் நடவடிக்கையை வேகப்படுத்தினார். அந்த சாலையில் மாநகர காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் வீடியோக்களை பார்வையிட்டனர். இந்நிலையில், கடத்தப்பட்ட ஆண் குழந்தை சேலத்தாம்பட்டியில் காவல்துறையினர் மீட்டனர். குழந்தையை கடத்திய பெண்கள் சேலத்தாம்பட்டி பகுதியில் விட்டுவிட்டு சென்றாதாகப் காவல் துறையினர் தெரிவித்தனர். குழந்தையை கடத்திய பெண்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாநகரின் மையப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடத்தப்பட்டு, காவல்துறையின் நடவடிக்கையால் மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.