சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே சொக்கம்பட்டி ஊராட்சியில் உள்ளது நாகிரெட்டிபட்டி ஏரி. இந்த ஏரி சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். கடந்த வாரம் பெய்த கன மழையால் ஏரியில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், குடிமராமத்து பணிக்காக ஏரியில் ஆங்காங்கே பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் அவற்றில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில், நேற்று (ஆக.11) சொக்கம்பட்டி கிராமம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சீனிவாசன் மகன்கள் ரித்தீஷ் (16) ஹாரிஸ் (17) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் மகன் தர்ஷன் (15) ஆகிய மூவரும் நாகிரெட்டிப்பட்டி ஏரியில் குளித்துள்ளனர்.
மூன்று பேரும் ஏரியில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவர்கள் சேற்றில் சிக்கிவுள்ளனர். இதனைக் கண்ட அருகிலிருந்த கிராம மக்கள், சிறுவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். இருப்பினும் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேச்சேரி காவல் துறையினர், மூன்று சிறுவர்களின் உடலையும் மீட்டு, உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது.