சேலம் மாவட்டம் ஆத்தூர், கல்வராயன் மலை, வாழப்பாடி, மேட்டூர், கொளத்தூர், கருமலைக்கூடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால், காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாராய ஊறல்களைக் கண்டுபிடித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக சேலம் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் தீபா காணிகேர் உத்தரவின் பேரில் 14 தனிப்படை காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் மலைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வரை மாவட்டம் முழுவதும் 72 இடங்களில் சாராய ஊறல் போட்ட நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அங்கு ஊறல் போடப்பட்டிருந்த ஏழாயிரத்து 900 லிட்டர் சாராயத்தை அழித்தனர். 32 நபர்களை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கள்ளச் சாராயம் விற்பனை செய்தாக 32 நபர்களைக் கைது செய்து, அவரிடமிருந்து ஆயிரத்து 591 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், 13 பேர் தலைமறைவாகவுள்ள குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த பத்து நாள்களில் டாஸ்மாக் சரக்குகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 236 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டாயிரம் லிட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக காவல் துறையின் அதிரடி சோதனையில் கள்ளச்சாராயம், டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்த 268 பேர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தற்போது மாவட்ட எல்லைகளில் தொடர்ந்து தனிப்படை காவல் துறையினர் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனிப்படை காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.