சேலம்: மு.க. ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 29) சேலம் வாழப்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
இந்தத் திட்டத்தின்கீழ் ஆயிரத்து 250 மருத்துவ முகாம்களையும் தொடங்கிவைத்து பல்வேறு திட்டங்களின்கீழ் பயனாளிகளுக்கு 24 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ஆண்டுக்கு 1,000 சிறப்பு முகாம்கள் மூலம் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவம் பெற்று பயன் அடைவார்கள்.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்
பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை - சிறப்பு மருத்துவம் எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை, உடல்நலம் குறித்த ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களைக் கண்டறிதல், நோய் கண்டவர்களுக்கு உடனடியாக மருத்துவம் அளித்தல், சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக உடல்நலம் மேம்பாடு - தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தக் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செயல்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் ஆயிரத்து 250 சிறப்பு முகாம்களில் பன்முனை மருத்துவப் பரிசோதனை, கண், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், காச நோய், மூட்டு எலும்பு சம்பந்தமான நோய்கள், இதய நோய்கள், சிறுநீரகக் கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மனநல மருத்துவம், கர்ப்பிணிகள், பெண்களுக்கான சிறப்பு மருத்துவம், புற்றுநோய் மருத்துவம் போன்றவை அளிக்கப்படும்.
மருத்துவப் பரிசோதனை சிகிச்சை இலவசம்
ஒவ்வொரு மாதமும் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டிய இடங்களைத் தேர்வுசெய்து எந்தெந்த நாள்களில் மருத்துவக்குழு எந்தெந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவுசெய்து முகாம்கள் நடத்தப்படும்.
போக்குவரத்து அதிகம் இல்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனை சிகிச்சை ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
இந்த வருமுன் காப்போம் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள், 100 விழுக்காடு கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கு நற்சான்றிதழ்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் கரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த 54 குழந்தைகளுக்கு ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
பயனாளிகளுக்கு கடன் உதவி
மேலும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 10 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 21 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் உறுப்பினர்களுக்குப் பயிர்கடன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் 115 குழுக்களில் உள்ள ஆயிரத்து 443 உறுப்பினர்களுக்கு சுய உதவிக் குழு கடன் உதவிகள், ஊராட்சித் துறை சார்பில் பொருளாதார கடன் வழங்கும் திட்டத்தில் 11 கோடியே 25 ஆயிரம் ரூபாய் கடன் உதவிகள், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 14 உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு கோடியே 91 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் என மொத்தம் 24 கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சேலம் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வருமுன் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்