சேலம்: கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் பழமை வாய்ந்த கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டி சுமார் 200 ஆண்டுகால பழமை வாய்ந்த, 100 அடி உயரமுள்ள ஈர்க்குச்சி மரம் உள்ளிட்ட ஏழு வகையான மரங்கள் இருந்தன. இங்கு, கெஜல்நாயக்கன்பட்டி, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்திச்செல்வது வழக்கம்.
இந்நிலையில், கருப்பண்ணசுவாமி கோயில் அமைந்துள்ள பகுதியின் அருகில் ரியல் எஸ்டேட் அதிபர் மதன்லால் என்பவர் நிலத்தை வாங்கி அதனை வீட்டுமனைகளாகப் பிரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், அந்த நிலத்தின் குறுக்கே சென்ற ஓடையை மண்மூடி மறைத்துவிட்டு மாற்றுப்பாதையில் ஓடை அமைத்து, வீட்டு மனைகள் அமைக்கப்பட்டு வருவதாகத்தெரிகிறது.
அந்த நீர் ஓடையின் பாதையில் கோயில் மற்றும் 200 ஆண்டுகால பழமை வாய்ந்த மரங்கள் இருந்த காரணத்தால் அதை வெட்ட முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தடுத்த கெஜல்நாயக்கன்பட்டி ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் கொடுத்தனர்.
மரங்களை சாய்த்த ரியல் எஸ்டேட் அதிபர்: பின்னர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கிராம நிர்வாக அலுவலர் சேகர், மரத்தை வெட்ட முற்பட்டவர்களை எச்சரித்து மரம் வெட்ட பயன்படுத்தப்பட்ட கருவிகளைப் பறிமுதல் செய்தார். மரத்தை வெட்ட மாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில் ஊர்ப்பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆனால், இதனைப் பயன்படுத்தி கொண்ட ரியல் எஸ்டேட் அதிபர் மதன்லாலின் பணியாளர்கள், உடனடியாக ஜேசிபி வாகனத்தை பயன்படுத்தி பழமை வாய்ந்த மரங்கள் அனைத்தையும் வேரோடு சாய்த்தனர்.
இந்தச் சம்பவம் ஊர்ப் பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மரத்தின் கீழே இருந்த கருப்பண்ணசாமி மற்றும் ஏழு கன்னிமார் சுவாமி சிலைகளை அகற்றி மாற்று இடத்தில் வைத்ததாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த ஊர்ப்பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அப்புறப்படுத்தப்பட்ட சிலைகளை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைத்து வழிபட்டனர்.
காவல் துறை பேச்சுவார்த்தை: மேலும், சாய்க்கப்பட்ட மரத்தை மீண்டும் அதே இடத்தில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அதே பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தச்சம்பவம் குறித்து முறைப்படி புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். இருந்தபோதிலும் வருவாய்த்துறையினர் கையாளவேண்டிய விவகாரத்தை காவல் துறையினர் தலையிட முடியாது எனக் கூறி பொதுமக்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பனமரத்துப்பட்டி ஏரியை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு அவ்வழியாக வருவதை அறிந்த பொதுமக்கள் அவரிடம் முறையிட தீர்மானித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறை துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி உடனடியாக சம்பவ இடத்திற்குச்சென்று பொதுமக்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த கிராம மக்கள்: இதனால் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவ்வழியே வந்த அமைச்சர் கே.என். நேருவின் காரை நிறுத்திய பொதுமக்கள் தங்கள் பிரச்னை குறித்து மனுவாக அவரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர், மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகத்திற்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், பழமை வாய்ந்த கோயில் மற்றும் மரத்தை அத்துமீறி அகற்றிய ரியல் எஸ்டேட் அதிபர் மதன்லால் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் நிஜ டாணாகாரர்கள்..!- காவலர்களின் துயரநிலை