சேலம்: சேலம் ஆத்தூர் அருகே 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராவண ஈஸ்வரமுடைய நாயனாா் கோயில் என்ற சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் பொன். வெங்கடேசன் கூறுகையில், "சேலம் வரலாற்று ஆய்வு மையம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பழமையான கல்வெட்டுகளைக் கண்டெடுத்து ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், ஆறுகள் உட்பகுதியில் கல்வெட்டுகளை தேடியபோது அழிந்துபோன சிவன் கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
12ஆம் நூற்றாண்டில் ஆறகளூா், மகதை மண்டலம் என்பதன் தலைநகராக விளங்கியுள்ளது. இதனை பொன்பரப்பின வானகோவரையன் என்ற குறுநில மன்னா் ஆட்சி செய்து உள்ளார். இவர், சோழப் பேரரசன் மூன்றாம் குலோத்துங்கனின் படைத் தளபதியாகவும் இருந்துள்ளார். பொன்பரப்பின வானவ கோவரையன் காலத்தில்தான் ஆறகளூா் காமநாதீஸ்வரா் கோயிலும், கரிவரதராஜப் பெருமாள் கோயிலும் கட்டப்பட்டு உள்ளது என்று சான்றுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், ஆறகளூா் கால்நடை மருத்துவமனை அருகே இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கைலாசநாதா் தோப்பில், ஒரு பழமையான சிவன் கோயில் இருந்து அழிந்து போனதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இங்கு ஒரு நந்தி சிலை இப்போதும் வழிபாட்டில் உள்ளது. இந்தப் பகுதியில் இருந்த 6 சிற்பங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே காணாமல் போய்விட்டன. இங்கு வழிபாடு செய்யப்பட்ட பைரவா் சிலை தற்போது, அருகிலுள்ள மாரியம்மன் கோயில் வளாகத்திலும், சண்டிகேசுவரா் சிலை தேர்நிலை தெற்கு கரையிலும் இன்றும் வழிபாட்டில் உள்ளது.
அதேபோல், கடந்த 17ஆம் நூற்றாண்டில் சிதைந்திருந்த இந்த சிவன் கோயிலின், கற்களைப் பயன்படுத்தி கரிவரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலுள்ள கமலமங்கை நாச்சியாா் கோயில் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு ஆவணமாக, அந்தச் சிவன் கோயிலுக்கு பாண்டிய மன்னா் தானம் அளித்த கல்வெட்டு, கமலமங்கை நாச்சியாா் கோயிலில் இன்றும் உள்ளது.
கமலமங்கை நாச்சியாா் கோயிலின் அா்த்த மண்டபத்தின் தென்புறம் உள்ள உப பீடத்தில் இக்கல்வெட்டு நான்கு வரிகளில் உள்ளது. 1269ஆம் ஆண்டு முதலாம் சடையவா்ம சுந்தரபாண்டியனின் 18ஆம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் மூலம் பல புதிய செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.
தற்போது, மக்களால் கைலாசநாதா் தோப்பு என அழைக்கப்படும் இடத்தில், அமைக்கப்பட்ட அழிந்து போன சிவன் கோயிலின் பெயா் ராவண ஈஸ்வரமுடைய நாயனாா் கோயிலாகும். அந்தக் காலத்தில் நிலங்களை அளக்க ‘சொக்கன் தடி’ என்ற நில அளவுகோல் நடைமுறையில் இருந்துள்ளது. வாணாதிதேவன் என்ற அலுவலர் இக்கல்வெட்டை வெட்டியிருப்பதால் பாண்டியா்கள் காலத்திலும், வாணகோவரையா் இப்பகுதியில் ஆட்சி செய்து வந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: '9ஆம் நூற்றாண்டு கல் செக்கு' - ஆண்டிப்பட்டி டூ கிண்ணிமங்கலம் என்ன தொடர்பு?