ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர், பழனி. இவரது மனைவி பச்சையம்மாள் (55). இருவரும் அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று(டிச.04) மாலை மழை பெய்ய தொடங்கியபோது, பச்சையம்மாள் வீட்டின் மாடியில் இருந்த துணிகளை எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது பச்சையம்மாளை, எதிர்பாராத விதமாக கொடிக் கம்பியின் வழியாக மின்சாரம் தாக்கி உள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட பச்சையம்மாள் மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வாழைப்பந்தல் போலீசார், பச்சையம்மாளின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழந்து, மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறார்கள்.
வீடுகள், கட்டிடங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மேலும், புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்ப பெறபட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், மின்சாரம் தாக்கி பென் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் துயரம்; சென்னையில் 8 பேர் உயிரிழப்பு - 15 பேர் மீட்பு!