அரக்கோணம் அருகே சோகனூரைச் சேர்ந்த அர்ஜுனனும், செம்பேடு காலனியைச் சேர்ந்த சூர்யாவும் நேற்று முன்தினம் கௌதம நகர்ப் பகுதியில் 10 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலைசெய்யப்பட்டனர். இருவரையும் கொலைசெய்தவர்கள் பாமக கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று விசிகவினரால் கூறப்படுகிறது.
இந்நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் கொலைசெய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் குடும்பத்துக்கும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சோகனூரில் சாதிவெறியர்களால் படுகொலைசெய்யப்பட்ட அர்ஜுன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
தாங்கொணா துயரத்தால் துவண்டுகிடந்த அவரது இளம் வயது மனைவி இலட்சுமியையும் ஆறு மாத கைக்குழந்தையையும் கண்டு மனம் பதைத்தது. தங்கை இலட்சுமிக்கு ஆறுதல் கூற இயலவில்லை. என்னை நானே தேற்றிக்கொண்டேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு ட்வீட்டில், "சாதிவெறியர்களால் படுகொலையான செம்பேடு சூர்யாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். திருமணமாகி ஒரு சில வாரங்களிலேயே சூர்யாவைப் பறிகொடுத்தப் பெருந்துயரில் சுருண்டு கிடக்கும் ஷாலினியைக் கண்டுப் பதறினேன். கட்சியின் சார்பில் இரு குடும்பத்தினருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.