ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த பெல் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் மிகுமின் நிறுவனத்தில் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்கள் தங்குவதற்காக தொழிற்சாலை அருகில் 300 வீடுகள் கொண்ட பில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று (டிச.20) இரவு பெல் புதிய குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து பூட்டி இருந்த 8 வீடுகளின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் வீட்டிலிருந்த தங்கம், வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்று உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு தலைமையிலான போலீசார், கொள்ளைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட வீடுகளில் இருந்த ஊழியர்கள் விடுமுறைக்காக, அவர்களது சொந்த ஊருக்குச் சென்று உள்ளதாக, மேலும் ஒரு சில வீடுகள் காலியாக உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தில், வீடுகளில் இருந்த சுமார் 20 சவரன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிப்காட் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும், இந்த பகுதியில் இது போன்று தொடர்ச்சியாக அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை நடைபெறுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாலை விரிவாக்க பணிக்காக வீட்டை இடிக்கும் போது மேற்கூரை விழுந்து உரிமையாளர் பலி!