ராணிப்பேட்டை: நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 8 பேர், பாமகவைச் சேர்த்த 5 பேர், அதிமுகவைச் சேர்ந்த 4 பேர், சுயேட்சைகள் 2 பேர் உட்பட 19 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனையடுத்து, கடந்த அக்.22ம் தேதி நடைபெற இருந்த ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் இடஒதுக்கீட்டை தவறாக குறிப்பிடப்பட்டதால் அதிமுகவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று (அக். 30) தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதிமுக பங்கேற்கவில்லை
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று காலை நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, பாமக, சுயேச்சைகள் உள்பட 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதிமுகவின் 4 உறுப்பினர்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை.
இதில், திமுகவைச் சேர்ந்த 9வது வார்டு உறுப்பினர் வடிவேல் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர், மதியம் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவுடன் பாமகவைச் சேர்ந்த 19ஆவது வார்டு உறுப்பினர் ச.தீனதயாளன் போட்டியின்றி தேர்வானார்.
இதையும் படிங்க: அருப்புக்கோட்டை தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு