ராணிப்பேட்டை: ஆற்காடு நாதமுனி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் சாக்லேட் விற்பனை செய்யும் நிறுவனத்தில் முகவராகப் பணிபுரிந்துவருகிறார். இவரது நண்பர் அருண் (21). இந்நிலையில் இருவரும் நேற்று (ஜூலை 11) மது அருந்தியுள்ளனர்.
பின்னர் தங்களது இருசக்கர வாகனத்தில், ஆற்காட்டில் உள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றுள்ளனர். சாப்பிட்டு முடித்த பின்னர் இருவரும் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியை, இவர்களது இருசக்கர வாகனம் முந்த முயன்றதாகக் கூறப்படுகிறது.
முந்திச் செல்லும் தகராறில் கொலை
இதில் லாரி ஓட்டுநருக்கும், இரு இளைஞர்களுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர், தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டன், அருண் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இரு வேறு கோணங்களில் விசாரணை
அருணின் உடலில் குறைந்த அளவிலான சிறு காயங்கள் மட்டுமே இருந்ததால், நண்பரால் மணிகண்டன் கொலைசெய்யப்பட்டாரா, லாரியும்-இருசக்கர வாகனமும் முந்த முயன்ற தகராறில் கொலைசெய்யப்பட்டாரா என்ற கோணத்தில் ஆற்காடு நகர காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இது தொடர்பாக சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் உள்ள வணிக வளாகங்கள், கட்டடங்களின் சிசிடிவி காட்சிகளும் ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு செய்த மகனைக் கொன்ற தந்தை!