ராணிப்பேட்டை: மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள சாதிக்பாஷா நகர், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் கருணாநிதி நகர் ஆகிய குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த 528 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. பாலாற்றின் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை, சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அகற்றினர்.
இதனையடுத்து, அந்த பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், மாற்று இடம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து, அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுக் கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட அ.தி.மு.க தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசுகையில், “ராணிப்பேட்டை சட்டமன்றத்திற்கு உட்பட்ட சாதிக்பாஷா நகர், எம்.ஜி.ஆர் நகர் மற்றும் கருணாநிதி நகர் ஆகிய குடியிருப்பு பகுதியில் எந்த விதமான முன்னறிவிப்புகளும் இன்றி, வீடுகளை இடித்து இருக்கிறார்கள்.
நீதிமன்றத்தின் ஆணையின்படி, அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு வீடுகளை அப்புறப்படுத்தி இருக்க வேண்டும். இந்த பகுதிகளில் அதிகம் வசிக்கக் கூடியவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். தி.மு.க அரசு நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்னார்கள்.
ஆனால், இந்நாள் வரை நீட் தேர்வுக்கு எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பொங்கல் தொகுப்பு இந்த வருடம் ஆயிரம் கொடுக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, தற்பொழுது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
அனைத்து ஆட்சியிலும் சாலைகள் போடப்பட்டு வருகிறது. அதனை மூன்று அல்லது நான்கு வருடத்திற்கு ஒருமுறை ரினிவல் என்ற பெயரில் மெயின்டனன்ஸ் செய்ய வேண்டும். அதனை திமுக ஆட்சி செய்வதில்லை. வேண்டுமென்றே கடந்த அதிமுக ஆட்சியின் மீது குறை சொல்கிறார்கள்.
அதிமுகவின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு கோடிக்கு மேல் தற்போது தொண்டர்கள் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால், சிறையில் உள்ள இஸ்லாமியர்களை நாங்கள் விடுதலை செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள்.
ஆனால், மூன்று வருடம் ஆகியும் இன்னும் அவர்கள் சிறையில்தான் உள்ளனர், விடுதலை செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறையில் இருந்த நண்பனை காணச் சென்றவருக்கு புழல்.. நடந்தது என்ன?