ராணிப்பேட்டை: ஆவதம் பகுதியில் இளைஞர் ஒருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த ஆவதம், மின்னல் காலனியைச் சேர்ந்தவர் பஸ்வான்(27). இவர் இன்று (ஜூன். 28) தனது நண்பருடன் இரு சக்கர வாகணத்தில் சென்று கொண்டிருந்த போது, ஆவதம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒரு கும்பல் ஒன்று இவர்களை வழிமறித்து பஸ்வானை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே கொலை செய்தவனை உடனடியாக கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடந்து, அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் சென்று உறவினர்களிடைய பேசி சமாதானம் செய்து வைத்தார். பின்னர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்த நபரின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கடந்த 2016ஆம் ஆண்டு தனியார் பேருந்து ஓட்டுநரான லோகேஷ் என்பவரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பஸ்வான் இன்று கொலை செய்யப்பட்டுள்ளார். முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர். இந்தக் கொலை தொடர்பாக விசாரிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.