ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா (35). இவரது அண்ணன் ரமேஷ் (38), தந்தை, தாய், மனைவி, இரண்டு கைக்குழந்தைகள், உறவினர்களுடன் புகார் மனுவுடன் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்திற்கு வந்த இவர்கள், திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் விரைந்து வந்து தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அவர்கள் அளித்த புகார் மனுவில், வாலாஜாப்பேட்டை அடுத்த வன்னிவேடு கிராமத்தில் கண்ணப்பநாயக்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தை அவரது வாரிசுகளான சுகுணா, டில்லி பாலாஜி, சாந்தி மற்றும் ராணி ஆகியோருக்கு பாகப்பிரிவினை மூலம் பெற்ற நிலத்தை மேற்கண்ட நான்கு பேரும் சேர்ந்து செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு கடந்த 2015இல் சொத்தை விற்று கிரையம் செய்துகொடுத்துள்ளனர்.
இதையடுத்து தனக்கு சொந்தமான நிலத்தை ரமேஷ் தனது உடன்பிறந்த சகோதரி வெண்ணிலாவுக்கு கடந்த 2019இல் தான் செட்டில் மெண்ட் செய்து பொது அதிகாரம் வழங்கியுள்ளார். அதைத்தொடர்ந்து அண்ணன் மூலம் கிடைத்த சொத்தை பாதுகாக்க வெண்ணிலா ரூ.10 லட்சம் செலவில் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வருகிறார்.
இந்த சூழலில் சொத்தை ரமேஷ் மற்றும் அவரது தங்கை வெண்ணிலா தரப்புக்கு தெரியாமல் பெங்களுரூவை சேர்ந்த வீராசாமி என்பவர் போலி ஆவணங்கள் மூலம் வாலாஜாப்பேட்டையை சேர்ந்த அப்துல்ரபிக் என்பவருக்கு கடந்த 2016இல் சொத்தை விற்கும் (பவர்) அதிகாரத்தை தந்து மோசடியாக விற்க முயற்சி செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரமேஷ், வெண்ணிலா ஆகியோர் வாலாஜா சார் பதிவாளரிடம் முறையிட்டும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் சொத்தை அளந்து கல் பதிய சென்ற ரமேஷ் தரப்பினரை வீராசாமியும், அப்துல் ரபீக்கும் அடியாட்களோடு வந்து மிரட்டி போடப்பட்ட கற்களையும் உடைத்து சேதப்படுத்தினார்கள். இது தொடர்பாக வாலாஜாப்பேட்டை காவல் ஆய்வாளர் பாலு என்பரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தீக்குளிக்க முயன்றவர்கள் முதலுதவியளிக்க வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க:காத்திருப்பு பட்டியலில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்!