விவசாயிகளுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் பண முறைகேடு நடப்பதாக வெளியாகிய தகவலை அடுத்து தமிழ்நாடு முழுவதும் முறைகேட்டை விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 898 பேர் தகுதியின்றி விண்ணப்பித்து பணம் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து வேலூர் சிபிசிஐடி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
அதன்தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டார வேளாண்மை அலுவலகத்தில், வேளாண் உதவி அலுவலராகப் பணியாற்றிய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர், வேலூர் சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வேளாண் அலுவலகத்தில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 898 பேர் தகுதியின்றி விண்ணப்பித்து 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இதில் தற்போதுவரை சுமார் 65 லட்சம் ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.