ராணிப்பேட்டை: மத்திய அரசின் விஸ்வகா்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் திராவிட கழகத்தின் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், “இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு என மத்திய அரசு கூறுவதை நிறைவேற்ற முயற்சிக்காது. வடிவேலு நகைச்சுவையைப் போன்று மகளிர் இடஒதுக்கீடு வரும், ஆனால் வராது என்பது போன்று இருக்கும்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது உடலில் தடுப்பூசி செலுத்துவதைப் போன்றது. அப்போதுதான் சாதியப் பிரிவுகளின் அடிப்படையில், ஏற்றத் தாழ்வுகளை களைந்து சமூகநீதியை நிலைநாட்ட முடியும். மகளிரின் சம உரிமையைப் பாதுகாப்பதில், இந்தியாவிலேயே தமிழகம் முன்மாதிரியாக உள்ளது. அதனால்தான் மகளிர் உரிமைத் தொகை எனும் திட்டத்தைக் கொண்டு வந்து, அவர்களின் இல்லத்திற்கே சென்று வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் உள்ள வாக்காளர்கள் எத்தனை பேர்? எந்த தொகுதியில் அதிக வாக்காளர்கள்? - முழு விபரம்!
'விஸ்வகர்மா யோஜனா' என்ற மத்திய அரசின் திட்டம் என்பது மீண்டும் குலக்கல்வி முறையைக் கொண்டு வரும் முயற்சி. அதை மத்திய அரசு உள்நோக்கத்துடன் கொண்டு வருகிறது. அதற்கு பாரம்பரியத் தொழில் என புதிய பெயரை வைத்துக் கொண்டு வந்துள்ளது. இது போன்று உள்நோக்கத்துடன் செயல்படுவதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டம்.
மேலும், சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் தமிழகத்தில்தான் உள்ளார். சாதாரண நிகழ்வுகளைக் கூட பெரிதாக்கி சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாக குற்றம் சாட்ட மத்திய அரசு முயற்சிக்கிறது. மணிப்பூர் கலவரம் உள்பட பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நல்ல நிலையில் உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதைக் கொண்டு வந்து, அதில் பித்தலாட்டம் செய்து ஜெயித்து விட்டால், அதுதான் நாட்டில் நடைபெறும் கடைசித் தேர்தலாக இருக்கும் என நம்புகின்றனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: "அதிமுக ஆட்சியில் நல வாரியங்கள் செயலற்றுக் கிடந்தது" - தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்