ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த முள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி தணிகைமலை(34) - லட்சுமி(32). தணிகைமலை சென்னையில் கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதேபோல், லட்சுமி மாம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக உள்ளார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், லட்சுமி பள்ளி விடுமுறை என்பதால் தனது இரண்டு மகன்களையும், ஆற்காடு பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் விட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் பணியை முடித்து விட்டு வீடு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் வீட்டினுள் சென்று பார்த்த லட்சுமிக்கு, அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ கதவு உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 8 சவரன் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளி கொலுசு போன்றவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த லட்சுமியின் குடும்பத்தார், உடனே இது குறித்து அவர் கலவை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டை ஆய்வு செய்து விசாரணை நடத்தி விட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், லட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் வீட்டின் மாடியில் உடைக்கப்பட்டு இருந்த இரும்புக் கதவை பார்க்கச் சென்ற போது, தரையில் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டவாறு திருடுபோன, 8 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு உள்ளிட்டவை இருந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் நகைகள் திருடப்பட்ட வீட்டை இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக விசாரணை செய்துவிட்டுச் சென்ற நிலையில், திருடப்பட்ட நகைகள் அனைத்தும் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டவாறு வீட்டின் மாடியில் வீசி சென்றுள்ள மர்ம நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இது குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: துப்பாக்கியை துடைக்கும்போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தாரா முன்னாள் ராணுவ வீரர்?