ராணிப்பேட்டை: மாம்பாக்கம் அருகே உள்ள பனையூர் கூட்ரோடு பகுதியில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த வரதப்பிள்ளை மகன் பிரகாஷ் (49) தறி நெய்தல் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மேகலா (41). மேகலாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கணவன், மனைவி இருவரும் மாம்பாக்கம் பகுதிக்கு சிகிச்சைக்காக இருச்சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது ஆரணியிலிருந்து செய்யாறு நோக்கி செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் பின்பக்கமாக மோதியுள்ளது. மேலும் லாரி மோதிய அந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளனர். அதன் பின்னர் அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது இருவரும் இறந்துவிட்டதால், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் பேரில் வந்த வாழைப்பந்தல் போலீசார் 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரகாஷ், மேகலா தம்பதியருக்கு 2 பெண் பிள்ளைகள் மற்றும் 1 மகன் என 3 பிள்ளைகள் உள்ளனர். மேலும், நேற்று முந்தினம் பெரிய மகளின் மஞ்சள் நீராட்டு விழா சடங்குகள் மேற்கொள்ள பொருட்களை வாங்கவும், மேகலாவுக்கு இடுப்பு வலி காரணமாக ஊசி போடுவதற்காகவும் சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது நிகழ்ந்த இந்த கோர விபத்தில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதால், அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நேற்று சென்னையை சேர்ந்த திருமால் என்ற நபர் வேலூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிய போது, கார் வாலாஜாப்பேட்டை பகுதியை அடுத்த குடிமல்லூர் அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கிரீஸ் அடிப்பதற்காக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் திருமால் உள்ளிட்ட மூவர் உடல் நசுங்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Chennai Power Cut: இரவு நேர மின்தடை - போராட்டக் களமாக மாறிய அம்பத்தூர் சாலை!