ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் ஹால் தெருவைச் சேர்ந்தவர் முத்துவிக்னேஷ் (31). இவர் குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில் நேற்று மதுபோதையில் வாகனம் ஓட்டிவந்த முத்துவிக்னேஷை கீழ்ப்பாக்கம் போக்குவரத்து காவலர்கள் மடக்கி சோதனை நடத்தினர். சோதனையில் அவர் அளவுக்கு அதிகமான போதையில் காரை ஓட்டிவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போக்குவரத்து காவல் துறையினர் அவரது கார் சாவியை வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளனர். இருப்பினும் அங்கிருந்து செல்லாத விக்னேஷ் காவலரிடம் சாவியை கேட்டு தொந்தரவு கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, முத்துவிக்னேஷ் காவல் துறையினரின் ரோந்து வாகனத்தின் சாவியை திருடி வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்போது ஓட்டிச் சென்ற வாகனம் எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனைத்தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் விரட்டிச் சென்று முத்துவிக்னேஷை மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர். கீழ்ப்பாக்கம் போக்குவரத்து காவலர் சுந்தர் அளித்த புகாரின்பேரில் முத்துவிக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.