இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தினை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (ஜூன்.30) காலை திறந்து வைத்தார். அதன் பின், இராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு அரசு விழாவுக்கு செல்லும் வழியில், காரைக்கூட்ரோட்டில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்கூட்ரோட்டில், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அந்த இல்லத்தில் உள்ள மாணவர்களிடம் பாடம் நடத்தும் முறை குறித்தும், வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆசிரியர்களிடம் அம்மாணவர்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அந்த இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆய்வின்போது, பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் மீது விளக்கம்கோரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.