ராணிப்பேட்டை: ரூ.118 கோடி மதிப்பீட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்திற்கு சென்னையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
வருவாய் மற்றும் நிர்வாக பணிகளுக்காக கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டத்தை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாக பிரித்து அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் கடந்த ஆண்டு 28ஆம் தேதி முதல் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வந்தது.
புதிய கட்டடம் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டது. அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மேற்கொண்டார். அதனடிப்படையில் ராணிப்பேட்டை பாரதி நகர் பகுதியில் 1,87,450 சதுர மீட்டர் பரப்பளவு இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், ரூ.118 கோடி மதிப்பீட்டில் ராணிப்பேட்டை, பாரதி நகரில் புதிய ஆட்சியர் அலுவலக வளாகம் கட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி புதன்கிழமை (அக்.28) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் இளவரசி, மக்களவை உறுப்பினர் முகமது ஜான், அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சு. ரவி, சோளிங்கர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத் மற்றும் அனைத்து அலுவலர்கள், அதிகாரிகள் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வெளிநாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை