ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னை பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 27). இவர் நெமிலியில் பனப்பாக்கம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 20ஆம் தேதி நெமிலி தட்டார தெருவில் விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலத்தின் போது நெமிலி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 26), அஜீத் (வயது 25), பாண்டியன் (வயது 24) ஆகியோருக்கும் சூர்யாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல பெட்ரோல் பங்கிற்கு இரவு பணிக்கு சூர்யா சென்றுள்ளார்.
அப்போது மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு வந்த மணிகண்டன், அஜீத் மற்றும் பாண்டியன் ஆகியோர் சேர்ந்து சூர்யாவை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும், பெட்ரோல் பிடிக்கும் பம்ப் எடுத்து கீழே வீசியும், அங்கிருந்த வாகனத்தை சேதப்படுத்தியும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சூர்யா நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் நெமிலி போலீசார் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து 3 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் பங்கில் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நெமிலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:நாட்டுப்புற கலைகளை மீட்க முயற்சி : 1000க்கும் மேற்பட்ட மகளிர் ஒயிலாட்டம், வள்ளி கும்மியாட்டம் ஆடி கண்கவர் விருந்து!