bullfighting festival: ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அடுத்த மாங்குப்பம் கிராமத்தில் 43ஆம் ஆண்டு புகழ்பெற்ற எருது விடும் திருவிழாவானது வெகுவிமர்சியாக இன்று (ஜன.22) நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாங்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற எருது விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 43ஆவது ஆண்டு எருது விடும் திருவிழாவானது வெகு விமர்சியாக நடைபெற்றது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று தயாராக இருந்த தடங்களில் சீறிப்பாய்ந்தன. போட்டியில் பங்கேற்க வந்த காளைகளை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின் போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர்.
ஒவ்வொரு காளையும் மூன்று சுற்றுகள் பங்கேற்ற பின் சராசரியை கொண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. போட்டியில் வென்ற காளைகளுக்கு முதல்பரிசாக 1 லட்சம் ரொக்கம், என மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் வினோத் காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முதல் பரிசான ஒரு லட்சம் ரூபாயை வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கு வழங்கினார்.
இதில் ஊர்மக்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளாக பங்கேற்று சீறிப்பாய்ந்த காளைகளை ரசித்தனர்.
இதையும் படிங்க: Punjab Assembly Polls: கல்லூரி மாணவிகளுக்கு எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்!