ராமநாதபுரம் : திருப்புல்லாணி அருகே உள்ளது காங்சிரங்குடி. இந்த ஊர் பக்கீர் அப்பா தர்கா பகுதியை சேர்ந்தவர் அமிர்தவள்ளி (28). இவரின் செல்போன் எண்ணில் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் கீழக்கரை வங்கி மேலாளர் பேசுவதாக கூறி, வங்கி கணக்கின் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகிவிட்டது.
அதனை புதுப்பித்து தருவதற்காக தொடர்பு கொண்டுள்ளேன். உங்கள் ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண்ணை தெரிவித்தால் உடனடியாக புதுப்பித்து தருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, வங்கி ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண்ணை அமிர்தவள்ளி தெரிவித்துள்ளார். அந்த கார்டின் 4 இலக்க ரகசிய எண்ணை தெரிவிக்குமாறு கேட்டதும் அதனையும் அவர் அளித்துள்ளார்.
பின்னர், சிறிது நேரத்தில் அவரின் செல்போன் எண்ணிற்கு அவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததும் அமிர்த வள்ளி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தொடர்ந்து 3 நாள்கள் இவ்வாறு வங்கி கணக்கில் இருந்து மொத்தம் 3 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அமிர்தவள்ளி, இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் புகாரளித்தார்.
இதனடிப்படையில் ராமநாதபுரம் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.