ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நேருஜி நகர் நான்காவது தெருவில் நிவாஸ் என்பவருக்குச் சொந்தமான பழமுதிர்ச்சோலை சூப்பர் மார்க்கெட் உள்ளது. அங்கு வேலை பார்க்கும் ஆட்டோ ஓட்டுநர் சின்னராசு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது செல்போனை சூப்பர் மார்க்கெட்டில் சார்ஜ் போட்டுவிட்டு பணியில் இருந்துள்ளார்.
பணி முடிந்து திரும்பிவந்து பார்க்கும்போது, செல்போனைக் காணவில்லை. உடனே கடையின் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, மனைவியுடன் சூப்பர் மார்கெட்டிற்குப் பொருள்களை வாங்கவந்த நபர் ஒருவர் செல்போனை திருடுவது பதிவாகியிருந்தது.
இரண்டு நாட்களாக செல்போன் காணாமல்போனதால் வேதனையடைந்திருந்த ஓட்டுநர் சின்னரசு நேற்று மதியம் எதேச்சையாக ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் இயங்கும் மோர் சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றபோது, அவரது போனை திருடிச் சென்ற நபர் அங்கிருந்துள்ளார்.
அவரைப் பிடித்து சின்னராசு, அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் கடையின் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளோடு ஒப்படைத்தார். காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் பெயர் யுவராஜ் (38) என்பதும் அரக்கோணம் கடற்படைத் தளத்தில் பணிபுரிவதும் (ஐன்எஸ் ராஜாளி) தெரியவந்தது.
யுவராஜ் இதுபோன்று வேறு எங்கும் திருட்டில் ஈடுபட்டுள்ளாரா? அவர் கடற்படைத் தளத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிகிறா? அல்லது நிரந்தர ஊழியராகப் பணிபுரிகிறா என்பது குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கூழாங்கற்களைத் திருடிய கும்பல்: போலீஸ் வலைவீச்சு