ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அருகே உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர், சீனிவாசன். கடந்த 2017ம் ஆண்டு பள்ளி முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அரசுப்பேருந்து மோதியதில் சீனிவாசனுக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில், காயம் அடைந்த மாணவர் தரப்பில் உரிய இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை கடந்த 2020ம் ஆண்டு விசாரித்த ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவர் சீனிவாசனுக்கு ரூ.6,35,000-ஐ இழப்பீடாக வழங்க அரசுப்போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், மாணவருக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடப்பட்டது. வட்டியுடன் சேர்த்து இழப்பீடு தொகையாக ரூ.8 லட்சம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தை ஏற்படுத்திய அரசுப்பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி சென்னையில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற அரசுப்பேருந்தை, முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து, ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு எடுத்து சென்றனர்.
இதையும் படிங்க: மெரினாவில் பேனா நினைவுச்சின்னத்துக்கு அனுமதி கிடைக்குமா?: இன்று இறுதி முடிவு?