ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே பாப்பேரி மற்றும் சின்னகுக்குந்தி அகிய இரண்டு கிராமங்கள் அமைந்துள்ளன. சின்னகுக்குந்தி பகுதியில் ரவி என்பவர் அவரது வீட்டில் அரசு மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (அக்.08) மாலை பாப்பேரியைச் சேர்ந்த இருவர் மதுபாட்டில் வாங்குவதற்காக சின்னகுக்குந்தி சென்றனர். அங்கு, ரவியிடம் இரண்டு மதுபான பாட்டில்கள் மட்டுமே இருந்துள்ளது அதனை அந்த இரண்டு நபர்களுக்கு கொடுத்துள்ளார். அப்போது, அங்கு சென்ற சின்னகுக்குந்தியைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவர் அந்த இரண்டு பாட்டில்களையும் தனக்கு கொடுக்குமாறு பாப்பேரியைச் சேர்ந்த இருவரிடமும் தகராறு செய்துள்ளார்.
இதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஏகாம்பரம் தனது மகன் உள்பட உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோரை பாப்பேரி கிராமத்திற்குச் சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆற்காடு கிராமிய காவல் துறையினர், மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் கட்டுப்படுத்தினர். இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் சுமார் 8 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பாப்பேரி கிராமத்திற்குள் சென்று தாக்குதல் ஈடுபட்ட சின்னகுக்குந்தி பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் உள்ளிட்ட 30க்கும் மேறட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கூறி நேற்று இரவு அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட 15 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சின்னகுக்குந்தியைச் சேர்ந்த பிரகாஷ் (21), ஜெகதீசன் (27), பாலகிருஷ்ணன் (27), வினோத் (23), தமிழ்வாணன் (23) மற்றும் பாப்பேரி பகுதியைச் சார்ந்த பிரவின் (21), தங்கராஜ் (31), ரமேஷ் (25) ஆகிய 8 பேரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்: சட்டவிரோதமாக டிக்கெட் விற்ற 30 பேர் கைது..!