ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அருகே நேற்று (டிச. 10) இரவு சென்னை அடுத்த செங்கல்பட்டு சிப்காட்டிலிருந்து கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா தொழில் நிறுவனத்திற்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுவருவதால், பல இடங்களில் ஒரு வழிப்பாதையில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக சாலை ஓரங்களில் ஈரமாக இருந்ததால் கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது.
கிரேன் உதவியுடன் அந்த வாகனத்தை இழுக்கும்போது சாலையின் குறுக்கே நின்றுவிட்டது. இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் காவேரிப்பாக்கம் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் யாரும் வராததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இரைதேடி வந்த பெண் யானைக்கு நேர்ந்த சோகம்!